“வினைத்தொகை” அதன் நிறுவன அறங்காவலர் திரு. வளர்மதியின் நீண்ட கால செயல்பாடுகளின் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாகும்.

புதுவைப் பல்கலைக் கழக மேலாண்மைப் பாடசாலையின் ஆளுகைக்குட்பட்ட பொருளியல் துறையில் உதவி பேராசிரியராக கல்விப் பணியாற்றிக் கொண்டிருக்கும் முனைவர் திரு. ஜெரோம் சாம்ராஜ், சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் சுவடியியல் துறையின் இணை பேராசிரியராக கல்விப் பணியாற்றிக் கொண்டிருக்கும் முனைவர் திரு. அ. சதீஷ், மற்றும் பத்திரிகையாளர் திரு. ராதிகா சுதாகர் ஆகியோரின் கடப்பாடுமிக்க துணையுடன் “புதிய தமிழ் ஆய்வுகள்” என்ற நிறுவனத்தை திரு. வளர்மதி கடந்த 2015 ஆண்டு தொடங்கினார். அந்நிறுவனம் வழி, கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நீண்ட கால அனுபவம் பெற்ற களப்பணியாளர்களின் ஆய்வுரைகள் நிகழ்த்தப் பெற்றன.

கீழடி தொல்லியல் ஆய்வுகள் குறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, அக்டோபர் 2015 -ல் நிகழ்த்தப்பட்ட ஒரு நாள் தேசியக் கருத்தரங்கமும், லொயோலா கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறையுடன் இணைந்து, டிசம்பர் 2016 -ல் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கமும் “புதிய தமிழ் ஆய்வுகள்” நிறுவனத்தின் ஆகச் சிறந்த முயற்சிகளாகும். இவையல்லாது, கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், களச்செயல்பாட்டாளர்கள் ஆற்றிய மாதாந்திர ஆய்வுரைகள் 2015 முதல் “புதிய தமிழ் ஆய்வுகள்” நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

சென்னை ஃப்ரெஞ்சு தூதரகத்தின் பண்பாட்டு நிறுவனமான அல்லையன்ஸ் ஃப்ரான்சே , எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், டான் போஸ்கோ தொடர்பியல் கலைகளுக்கான நிறுவனம், மற்றும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறை ஆகியவற்றோடு இணைந்து, 2016 ஆம் ஆண்டு மார்ச் 16 – 25 தேதிகளில், “பனித்திரை” – யின் பாற்பட்டு 10 நாட்கள் நடைபெற்ற பன்னாட்டு ஆவணப்பட விழாவையும் “வினைத்தொகை” நிறுவன அறங்காவலர் நிகழ்த்தியுள்ளார்.

சென்னையில் இருந்த “ஹியூஸ் ஆர்ட் காலரி”யுடன் இணைந்து, 2007 ஆகஸ்டு 16 – 22 தேதிகளில், ஓவியர்கள், கவிஞர்கள், நாடகக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், நாவலாசிரியர்கள், விமர்சகர்கள் எனக் கலைத் துறைகளின் பல பிரிவினரும் பங்கேற்றுச் சிறப்பித்த “மெல்லமைதி சான்ற புலனறிவு நோக்குகள்” என்ற நிகழ்வையும் ஒருங்கிணைத்தார்.

மதுரை நகரில் செயல்பட்டு வந்த “யதார்த்தா” என்ற திரைப்பட ஆர்வலர் அமைப்புடன் இணைந்து, 2007 பிப்ரவரி 15 – 20 தேதிகளில் 35 ஆவணப் படங்களைத் திரையிட்டு, ஆவணப் படங்களின் வகைமாதிரிகள் குறித்த விளக்கவுரைகளும் ஆற்றினார்.

விளிம்புநிலை வரலாற்று ஆய்வுகள், சிவில் சமூகம், மற்றும் ஒடுக்கப்பட்ட – விலக்கப்பட்ட – சிறுபான்மைச் சமூகங்களின் நலன் பாற்பட்டு, கருத்தியல் அளவிலும் நடைமுறை பாற்பட்டும் செயல்பட்டு வருபவர்.

நாடக ஆசிரியர், நிறுவனம் சாரா திரைப்பட இயக்குனர், இலக்கிய விமர்சகர், கோட்பாட்டாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல துறை பாற்பட்டு இயங்கி வருபவர். தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஆப்பிரிக்க – அமெரிக்க இலக்கியத்தை மொழியாக்கம் செய்து அறிமுகப்படுத்தியவர்.

தமிழ் சூழலுக்கு பொருந்திய அளவில் சர்வதேசச் சட்டம் குறித்து எழுதிய சில கட்டுரைகள் “சட்டமும் சமூக மாற்றமும்” என்ற திசையில் செயல்படும் ஊக்கத்தை அவருக்கு அளித்துள்ளன.